தமிழகத்து வரலாற்றுக்குட்பட்ட காலம் சங்க காலம் ஆகும். இக்காலத்தில்
தமிழரின் நாகரிகம் முழு வளர்ச்சியுற்றிருந்தது. மூன்று பேரரசுகள் சங்க காலத்தில் அமைந்திருந்ததைச்
சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இம்மூன்று பேரரசுகளை ஆண்ட மன்னர்கள்
தங்கள் நாட்டிற்கு நன்மையைச் செய்து மேன்மையடையச் செய்தனர். ஒவ்வோர் மன்னர்க்கும் இடையே
ஆதிக்கப்போட்டி நடைபெற்று வந்தாலும் நாட்டின் நலனில் அக்கறை கொண்டிருந்தனர். இச்சங்க
காலத்தின் அரசியலில் மக்களின் பங்கும் அவசியமாகிறது. எனவே அக்கால மக்களின் வாழ்க்கை
முறையைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகிறது.
சங்க
காலத்தில் நாடானது நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு அந்நிலத்தின் வழியே
மக்களும் தங்களது வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர். குறிப்பாகக் காடும் காட்டைச் சார்ந்த
இடத்தை முல்லை என்றும், மலையும், மலையைச் சார்ந்த இடத்தை குறிஞ்சி என்றும், வயலும்
வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த பகுதியை நெய்தல் என்றும்
பிரித்து அவ்வந்நிலத்தை ஒட்டியே வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறு
நிலத்தை ஒட்டிவாழ்ந்த சங்க கால மக்கள் மொழிக்கு மட்டும் இலக்கணம் வகுத்துக் கொள்ளாமல்
அவர்களுடைய வாழ்க்கை முறைக்கும் இலக்கணம் வகுத்துக் கொண்டு வாழ்ந்த பெருமைக்குரியவர்
ஆவர்.
குலம்
தமிழகத்தில்
சங்க காலத்திலேயே பல குலங்கள் மக்கள் செய்துவந்த தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன.
இடையர், உழவர், எயினர், கம்மியர், குயவர், குறவர், கூத்தர், கொல்லர், தச்சர், பரதவர்,
வணிகர், வேடுவர் எனப் பல குலங்கள் தோன்றியிருந்தன. இவர்களுக்குள் திருமணம் செய்து கொள்வதில்
தடை ஏதும் இல்லாமல் இருந்து வந்தது என்பர். ஒவ்வொரு குலமும் தமிழகத்தில் விலக்க முடியாத
ஓர் உறுப்பாகவே செயல்பட்டு வந்தது.
கல்வி
சங்க
காலத் தமிழர் கல்வியின் சிறப்பை நன்கு உணர்ந்திருந்தனர். கல்வி எல்லோருக்கும் பொதுவான
ஒன்றாக இருந்தது. கல்வி கற்பவன் மன்னனாகவும் இருக்கலாம் அல்லது எளிய குடியில் பிறந்தவனாகவும்
இருக்கலாம். எந்த ஒரு கட்டுப்பாடும் அக்காலத்தில் காணப்படவில்லை. எக்குலத்தவரும் கல்வி
பயிலலாம். ஒவ்வோர் ஊரிலும் கல்வி கற்பிக்கும் கணக்காயர் என்பவர்கள் இருந்தனர். ஊர்தோறும்
கல்வி கற்பிக்கும் கணக்காயர் இருக்க வேண்டிய இன்றியமையாமையைத் திரிகடுகம்பின்வருமாறு
குறிப்பிடுகிறது.
கணக்காயர்
இல்லாத ஊரும்
நன்மை
பயத்தல் இல் (திரிகடுகம், 10)
(கல்வி
கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் இருத்தல் ஒருவனுக்கு எவ்வித நன்மையும் தருவது இல்லை.
கணக்காயர்-ஆசிரியர்; பயத்தல்-தருதல்; இல்-இல்லை).
கல்வி பயிற்றுவிக்கப்படும்
இடம் பள்ளி எனப்பட்டது. பெரும்பாலும் திண்ணைகளிலேயே பள்ளிகள் நடைபெற்று வந்தன. கல்வி
பயிலும்போது மாணவர்கள் ஓலையின் மேல் எழுத்தாணி கொண்டு எழுதினர்.
மாணவர்கள்
கல்வி பயிலும்போது இரந்துண்ணும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது என அறிகின்றோம்.
இரந்தூண் நிரம்பா மேனியொடு
(குறுந்தொகை,33:3)
(இரந்து பெறும் உணவினால்
நன்கு வளராத மேனியோடு. மேனி-உடம்பு.)
மாணவர்கள்
ஆசிரியர்களுக்குப் பொருள் கொடுத்தும் தொண்டுகள் புரிந்தும் பயின்றனர். அக்காலத்தில்
கபிலர், பரணர், நக்கீரர் போன்ற பெரும்புலவர் பலர் வாழ்ந்து வந்தனர். மாணவர்கள் தொல்காப்பியம்,
காக்கைபாடினியம் ஆகிய இலக்கண நூல்களைப் பயின்றதாகத் தெரிகிறது. ஏரம்பம் என்ற ஒரு கணித
நூல் பழந்தமிழகத்தில் வழங்கி வந்தது. அதனை மாணாக்கர் பயின்றனர். இவ்வாறாகக் கல்வி நல்ல
நிலையில் இருந்து வந்தது.
கலை
பண்டைய
காலத்தில் கலைகளில் ஓவியம், இசை, கூத்து, நாடகம் ஆகியவை மிக உயர்ந்த நிலையை எட்டியிருந்ததாகத்
தெரிகிறது. ஓவியத்திற்கு என்று ஒரு நூல் வழக்கில் இருந்ததாகவும் கூறுவர். சுவர்களின்
மேல் வண்ண ஓவியங்கள் தீட்டியிருந்தனர். எளிதில் அழிந்து போகக் கூடிய வண்ணங்களை ஓவியர்கள்
பயன்படுத்தியிருந்தனர்.
இசை,
நாடகம், நாட்டியம், கூத்து ஆகிய கலைகளின் வளர்ச்சியைப் பற்றிய விளக்கங்களை சிலப்பதிகார
அரங்கேற்று காதையில் விரிவாகக் காணலாம். ஆண்களும், பெண்களும் கூத்திலும், இசையிலும்
மேம்பட்டிருந்தனர். மன்னன் முன்பு தம் கலையாற்றலைக் காட்டிப் பெரும் பரிசில்களைப் பெற்று
வந்தனர் பழந்தமிழ் மக்கள். கரிகால் சோழனின் மகள் ஆதிமந்தியின் கணவன் ஆட்டனத்தி என்பான்
நடனத்தில் ஈடு இணையற்று விளங்கினான்.
நாட்டியம்,
கூத்து ஆகிய கலைகளைப் பற்றிய பல விரிவான நூல்கள் அக்காலத்தில் தமிழில் இருந்தன. அவை
அனைத்தும் காலப்போக்கில் அழிந்து விட்டன.
அரங்கின் முன்பு மூன்று
வகையான திரைகள் தொங்கவிடப்பட்டன. திரையை எழினி என்று குறிப்பிட்டனர்.
கூத்தில்
பதினொரு வகை இருந்ததாகத் தெரிகிறது. அவையாவன: கடையம், மரக்கால், குடை, துடி, அல்லியம்,
மல், குடம், பேடு, பாவை, கொடுகொட்டி, பாண்டரங்கம் என்பன.
இவ்வாறாகச் சங்க காலத்தில்
கலை நன்கு வளர்ச்சியுற்றிருந்தது.
சங்க கால ஆட்சி முறை
பொதுவாகச்
சங்க காலத்தில் நற்குணங்கள் நிறைந்த மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். ஒரு சிலர் கொடுங்கோலாட்சியும்
செய்து வந்தனர். மன்னர்கள் மக்களின் நல்வாழ்விற்காக அரும்பாடுபட்டனர் என்பதும் புரிகிறது.
ஒற்றர்கள் வாயிலாக மக்கள் நிலையை மன்னர்கள் அறிந்து அதற்கு ஏற்றவாறு பணியாற்றி வந்தனர்.
சங்க காலத்தில் ஊராட்சி, நகராட்சி என்ற அமைப்புகள் இருந்தன.
அமைச்சர்
அரசருக்கு
ஆலோசனை கூறுவதற்கு அமைச்சர்கள் இருந்தனர். தவறான ஆலோசனை கூறி அதனால் தீமை விளையுமாயின்
ஆலோசனை வழங்கிய அமைச்சர்கள் ஏளனம் செய்யப்பட்டனர்.
அரசுப் பதவியில் இருப்பவர்கள்
சிறப்பாகச் செயல்பட்டால் அவர்களுக்கு மன்னன் பட்டங்கள் வழங்கிச் சிறப்புச் செய்தான்.
சான்றாகஎட்டி, காவிதி, ஏனாதி போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.
தூதுவர்
சங்க
கால மன்னர்கள் தூதுவர்களை நியமித்திருந்தனர். தூது செல்லுதல் அவர்களது பணியாகும். பொதுவாகத்
தூதுவர்கள் நடுவராக இருந்து வந்தனர். ஔவையார் அதிகமான் நெடுமான் அஞ்சியின் தூதுவராகத்
தொண்டைமான் அவைக்குச் சென்றார். பெரும்புலவரானகோவூர்கிழார் தூதுவராகச் செயல்பட்டு,
நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆகிய இரு மன்னர்களுக்கும் இடையே நடந்த போரைத் தவிர்த்து அவர்கள்
இருவருக்கும் இடையில் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்குப் பாடுபட்டார்.
ஒற்றர்
சங்க
கால மன்னர்கள் தூதுவர்களைப் போல் ஒற்றர்களையும் நியமனம் செய்தனர். ஒற்றர் முறை நிரந்தரமான
அமைப்பாக இருந்து வந்தது. இவ்வொற்றர்கள் பல்வேறு வகைப்பட்ட சத்தங்களை எழுப்பித் தங்கள்
செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர். ஒற்றர்கள் உள்நாட்டு மக்களையும், அயல் நாட்டினரையும்
உளவு பார்த்து வந்தனர். மேலும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், அரச குடும்பத்தினர்,
பகைவர்கள் ஆகியோர்களை உளவு பார்த்து வந்தனர். இவர்கள் மாறுவேடங்களில் இருந்து வந்தனர்.
ஒற்றர்கள் கூறுவது மற்ற ஒற்றர்கள் மூலம் அறிந்து கொள்ளப்பட்டது. ஓர் ஒற்றர் கூறுவதை
உண்மையானது என்று முடிவு செய்யாமல், ஒற்றர்களுக்கு ஒற்றராகச் செயல்படும் மற்றோர் ஒற்றரின்
கருத்தைக் கேட்டு உறுதி செய்யப்பட்டது. மூன்றாவது ஒற்றரையும் கேட்டுச் செய்திகள் சேகரிக்கப்பட்டன.
ஒற்றர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாமல் தனியாகச் செயல்பட்டனர். ஒற்றர் தவறாகச்
செயல்பட்டால் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.சங்க கால விருந்தோம்பலும் பண்பாடும்பண்டைய தமிழரின் வாழ்க்கை அறத்தின் அடிப்படையில் அமைந்தது. அறவாழ்க்கையின் முழுமை அன்பு என்ற பண்பால் மேன்மையடைந்தது. அன்பு ஒன்றே அனைத்திற்க்கும் ஆதரமாக அமைந்தது.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு அடைதல் நூற்பயன் என்பர். இந்நான்கினுள் அறம் வலிமையுடையதாகக் கருதப்படுகின்றது. இவ்வறத்தினை மேற்கொள்ள பொருள் வேண்டப்படுகின்றது. இப்பொருளைத் தேடுவதற்குத் தலைவன் தலைவியைப் பிரிந்து பொருளீட்டும் தன்மையும் அப்பொருளைக் கொண்டு தலைவி விருந்து என்னும் அறம் புரிந்த பண்பும் சங்கப்பாடல்களில் புலவர்கள் பதிவு செய்துள்ளனர். சங்க கால மக்கள் பசித்துவரும் புதியவர்களுக்காகச் சிறந்த உணவை நாள்தோறும் அளித்தனர். .
“கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கம்
மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஒம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்”3
என்று தொல்காப்பியர் சங்க காலத் தலைவியின் மாண்புகளில் விருந்து புறந்தருதலைத் ஒரு செயலாகக் குறிப்பிடுவதைக் காணலாம். விருந்து செய்தல் வேண்டி சிறந்த பொருளை ஈட்டி வருதல் தலைவனுக்குரிய கடமையாக அமைந்தது. இதனை,
“செழுநகர் நல்விருந்து அயர்மார் ஏமுற
விழுநிதி எளிதினின் எய்துக தில்ல
கல்பிறங் காரிடை விளங்கிய
சொல்பெயர் தேஎத்த சுரனிறந்தோரே”4
அகநானூற்று பாடல் வழி சங்க கால மக்கள் தங்களுடைய வாழ்க்கைகாக மட்டுமல்லாது விருந்தினருக்கு உணவு கொடுப்பதற்காகப் பொருளீட்டச் செல்லுதல் அக் கால மக்களின் தலைச் சிறந்த பண்பாட்டுப் பதிவாக அமைகின்றது. இதனையே வள்ளுவர்.
“செல்விருந் தோம்பி வருவிருந்து பார்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.”5
விருந்தோம்பல் சிறப்பினை குறள் வழி தெளிவுப்படுத்துகிறார்.
போர் புரிதலில் - நாகரிகமும் பண்பாடும்
சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் போருக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் போரிடுவதற்குத் தனிப்பட்ட அறம் மேற்கொண்டனர். திடீரென்று போர் மேற் கொண்டு பகை மன்னருக்குள் நெருக்கடியை ஏற்படுத்தாமல் போரில் சில விதி முறைகளையும் அறப்பண்பையும் பின்பற்றி வாழ்தனர். போரிடும்பொழுது முன்னரே அறிவித்தனர் யார் யாரெல்லாம் பாதுகாப்பான இடம் செல்ல வேண்டும் என்பது முரசறைந்து அறிவிக்கப்பட்டதைத் தமிழரின் பண்பட்ட நாகரீகத்தினைப் புறநானூறு காட்டுகிறது. இதனை,
“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்னர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர் பெறாய தீரும்
எம் அம்பு கடிவிடதும் நும்அரண் சேர்மின்”10
இதில் பசு அந்தணா பெண்கள் பிணியுடையோர், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் ஆகியவர்கள் பாதுகாப்பான இடத்தை அடைய அறிவுறுத்தப்பட்டனர். இதன் மூலம் தமிழர்களின் பண்பாட்டின் உயர்ந்த நிலை விளங்குகின்றது.